1 இராஜாக்கள்

பாடம்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

0:00
0:00

அதிகாரம் 1

தாவீதுராஜா வயதுசென்ற விர்த்தாப்பியனானபோது, வஸ்திரங்களினால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை.
2 அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி: ராஜசமுகத்தில் நின்று, அவருக்குப் பணிவிடை செய்யவும், ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு அனல் உண்டாகும்படி உம்முடைய மடியிலே படுத்துக்கொள்ளவும் கன்னியாகிய ஒரு சிறு பெண்ணை ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்குத் தேடுவோம் என்று சொல்லி,
3 இஸ்ரவேலின் எல்லையிலெல்லாம் அழகான ஒரு பெண்ணைத் தேடி, சூனேம் ஊராளாகிய அபிஷாகைக் கண்டு, அவளை ராஜாவினிடத்தில் கொண்டுவந்தார்கள்.
4 அந்தப் பெண் வெகு அழகாயிருந்தாள்; அவள் ராஜாவுக்கு உதவியாயிருந்து அவனுக்குப் பணிவிடைசெய்தாள்; ஆனாலும் ராஜா அவளை அறியவில்லை,
5 ஆகீத்திற்குப் பிறந்த அதோனியா என்பவன்; நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி, தனக்கு இரதங்களையும் குதிரைவீரரையும், தனக்குமுன் ஓடும் ஐம்பது காலாட்களையும் சம்பாதித்தான்.
6 அவனுடைய தகப்பன்: நீ இப்படிச் செய்வானேன் என்று அவனை ஒருக்காலும் கடிந்துகொள்ளவில்லை; அவன் மிகவும் அழகுள்ளவனாயிருந்தான்; அப்சலோமுக்குப்பின் அவனுடைய தாய் அவனைப் பெற்றாள்.
7 அவன் செருயாவின் குமாரனாகிய யோவாபோடும், ஆசாரியனாகிய அபியத்தாரோடும் ஆலோசனைபண்ணிவந்தான்; அவர்கள் அவனிடத்திலிருந்து அவனுக்கு உதவிசெய்துவந்தார்கள்.
8 ஆசாரியனாகிய சாதோக்கும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், சீமேயியும், ரேயியும், தாவீதோடிருக்கிற பராக்கிரமசாலிகளும், அதோனியாவுக்கு உடந்தையாயிருக்கவில்லை.
9 அதோனியா இன்றோகேலுக்குச் சமீபமான சோகெலெத் என்னும் கல்லின் அருகே ஆடுமாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் அடித்து, ராஜாவின் குமாரராகிய தன் சகோதரர் எல்லாரையும், ராஜாவின் ஊழியக்காரரான யூதாவின் மனுஷர் அனைவரையும் அழைத்தான்.
10 தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், பெனாயாவையும், பராக்கிரமசாலிகளையும், தன் சகோதரனாகிய சாலொமோனையும் அழைக்கவில்லை.
11 அப்பொழுது நாத்தான் சாலொமோனின் தாயாகிய பத்சேபாளை நோக்கி: நம்முடைய ஆண்டவனாகிய தாவீதுக்குத் தெரியாமல், ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா ராஜாவாகிற செய்தியை நீ கேட்கவில்லையா?
12 இப்போதும் உன் பிராணனையும், உன் குமாரனாகிய சாலொமோனின் பிராணனையும் தப்புவிக்கும்படிக்கு நீ வா, உனக்கு நான் ஆலோசனை சொல்லுவேன்.
13 நீ தாவீது ராஜாவினிடத்தில் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உமது அடியாளுக்கு ஆணையிடவில்லையா? அப்படியிருக்க, அதோனியா ராஜாவாகிறது என்ன? என்று அவரிடத்தில் கேள்.
14 நீ அங்கே ராஜாவோடே பேசிக்கொண்டிருக்கையில், நானும் உனக்குப் பின்வந்து, உன் வார்த்தைகளை உறுதிப்படுத்துவேன் என்றான்.
15 அப்படியே பத்சேபாள் பள்ளியறைக்குள் ராஜாவிடத்தில் போனாள்; ராஜா மிகவும் வயதுசென்றவனாயிருந்தான்; சூனேம் ஊராளாகிய அபிஷாக் ராஜாவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.
16 பத்சேபாள் குனிந்து, ராஜாவை வணங்கினாள்; அப்பொழுது ராஜா: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான்.
17 அதற்கு அவள்: என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைக் கொண்டு, உமது அடியாளுக்கு ஆணையிட்டீரே.
18 இப்பொழுது, இதோ, அதோனியா, ராஜாவாகிறான்; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் அதை அறியவில்லை.
19 அவன் மாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் ஆடுகளையும் திரளாக அடித்து, ராஜாவின் குமாரர் அனைவரையும் ஆசாரியனாகிய அபியத்தாரையும், யோவாப் என்னும் படைத்தலைவனையும் அழைத்தான்; ஆனாலும் உமது அடியானாகிய சாலொமோனை அழைக்கவில்லை.
20 ராஜாவாகிய என் ஆண்டவனே, ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப்பிறகு அவருடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பவன் இன்னான் என்று தங்களுக்கு அறிவிக்கவேண்டும் என்று இஸ்ரவேலர் அனைவரின் கண்களும் உம்மை நோக்கிக் கொண்டிருக்கிறது.
21 அறிவியாமற்போனால் ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய பிதாக்களோடே படுத்துக்கொண்டபின்பு, நானும் என் குமாரனாகிய சாலொமோனும் குற்றவாளிகளாய் எண்ணப்படுவோம் என்றாள்.
22 அவள் ராஜாவோடே பேசிக்கொண்டிருக்கையில், தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்தான்.
23 தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்திருக்கிறார் என்று ராஜாவுக்குத் தெரிவித்தார்கள்; அவன் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்து முகங்குப்புற விழுந்து ராஜாவை வணங்கினான்.
24 நாத்தான்: ராஜாவாகிய என் ஆண்டவனே, அதோனியா எனக்குப் பின் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பான் என்று நீர் சொன்னதுண்டோ?
25 அவன் இன்றையதினம் போய், மாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் ஆடுகளையும் திரளாக அடித்து, ராஜாவின் குமாரர் அனைவரையும் இராணுவத்தலைவரையும், ஆசாரியனாகிய அபியத்தாரையும் அழைத்தான்; அவர்கள் அவனுக்கு முன்பாகப் புசித்துக் குடித்து, ராஜாவாகிய அதோனியா வாழ்க என்று சொல்லுகிறார்கள்.
26 ஆனாலும் உமது அடியானாகிய என்னையும், ஆசாரியனாகிய சாதோக்கையும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவையும், உமது அடியானாகிய சாலொமோனையும் அவன் அழைக்கவில்லை.
27 ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப்பின் தமது சிங்காசனத்தில் வீற்றிருப்பவன் இவன் தான் என்று நீர் உமது அடியானுக்குத் தெரிவிக்காதிருக்கையில், இந்தக் காரியம் ராஜாவாகிய என் ஆண்டவன் கட்டளையால் நடந்திருக்குமோ என்றான்.
28 அப்பொழுது தாவீதுராஜா பிரதியுத்தரமாக: பத்சேபாளை என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்; அவள் ராஜசமுகத்தில் பிரவேசித்து ராஜாவுக்கு முன்னே நின்றாள்.
29 அப்பொழுது ராஜா: உன் குமாரனாகிய சாலொமோன் எனக்குப்பின் அரசாண்டு, அவனே என் ஸ்தானத்தில் என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நான் உனக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்மேல் ஆணையிட்டபடியே, இன்றைக்குச் செய்து தீர்ப்பேன் என்பதை,
30 என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று ஆணையிட்டான்.
31 அப்பொழுது பத்சேபாள் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி, என் ஆண்டவனாகிய தாவீதுராஜா என்றைக்கும் வாழ்க என்றாள்.
32 பின்பு தாவீதுராஜா, ஆசாரியனாகிய சாதோக்கையும் தீர்க்கதரிசியாகிய நாத்தானையும் யோய்தாவின் குமாரன் பெனாயாவையும் என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்.
33 அவர்கள் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்தபோது, ராஜா அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, என் குமாரனாகிய சாலொமோனை என் கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டு போங்கள்.
34 அங்கே ஆசாரியாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணக்கடவர்கள்; பின்பு எக்காள்ம் ஊதி, ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்துங்கள்.
35 அதின்பின்பு அவன் நகர்வலம் வந்து, என் சிங்காசனத்தில் வீற்றிருக்கும்படி, அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்; அவனே என் ஸ்தானத்தில் ராஜாவாயிருப்பான்; அவன் இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் தலைவனாயிருக்கும்படி அவனை ஏற்படுத்தினேன் என்றான்.
36 அப்பொழுது யோய்தாவின் குமாரன் பெனாயா ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆமென், ராஜாவாகிய என் ஆண்டவனுடைய தேவனாகிய கர்த்தரும் இப்படியே சொல்வாராக.
37 கர்த்தர் ராஜாவாகிய என் ஆண்டவனோடே எப்படி இருந்தாரோ, அப்படியே அவர் சாலொமோனோடும் இருந்து, தாவீது ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சிங்காசனத்தைப்பார்க்கிலும் அவருடைய சிங்காசனத்தைப் பெரிதாக்குவாராக என்றான்.
38 அப்படியே ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், யோய்தாவின் குமாரன் பெனாயாவும், கிரேத்தியரும் பிலேத்தியரும் போய், சாலொமோனைத் தாவீது ராஜாவினுடைய கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு நடத்திக்கொண்டுபோனார்கள்.
39 ஆசாரியனாகிய சாதோக்கு தைலக்கொம்பைக் கூடாரத்திலிருந்து எடுத்துக் கொண்டுபோய், சாலொமோனை அபிஷேகம்பண்ணினான்; அப்பொழுது எக்காளம் ஊதி, ஜனங்களெல்லாரும் ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்தினார்கள்.
40 பிற்பாடு ஜனங்களெல்லாரும் அவன் பிறகாலே போனார்கள்; ஜனங்கள் நாகசுரங்களை ஊதி, பூமி அவர்கள் சத்தத்தினால் அதிரத்தக்கதாக மகா பூரிப்பாய்ச் சந்தோஷித்தார்கள்.
41 அதோனியாவும் அவனோடிருந்த எல்லா விருந்தாளிகளும் போஜனம் பண்ணி முடிந்தபோது அதைக் கேட்டார்கள்; யோவாப் எக்காளசத்தத்தைக் கேட்டபோது, நகரத்தில் உண்டாயிருக்கிற ஆரவாரம் என்ன என்று விசாரித்தான்.
42 அவன் பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியனாகிய அபியத்தாரின் குமாரன் யோனத்தான் வந்தான்; அப்பொழுது அதோனியா, உள்ளே வா, நீ கெட்டிக்காரன், நீ நற்செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.
43 யோனத்தான் அதோனியாவுக்குப் பிரதியுத்தரமாக: ஏது, தாவீதுராஜாவாகிய நம்முடைய ஆண்டவன் சாலொமோனை ராஜாவாக்கினாரே.
44 ராஜா ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், யோய்தாவின் குமாரன் பெனாயாவையும், கிரேத்தியரையும் பிலேத்தியரையும் அவனோடே அனுப்பினார்; அவர்கள் அவனை ராஜாவுடைய கோவேறுகழுதையின்மேல் ஏற்றினார்கள்.
45 ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், அவனைக் கீகோனிலே ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்; நகரமெல்லாம் முழங்கத்தக்கதாக அங்கேயிருந்து பூரிப்போடே புறப்பட்டுப் போனார்கள்; நீங்கள் கேட்ட இரைச்சல் அதுதான்.
46 அல்லாமலும் சாலொமோன் ராஜாங்கத்துக்குரிய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறான்.
47 ராஜாவின் ஊழியக்காரரும் தாவீது ராஜாவாகிய நம்முடைய ஆண்டவனை வாழ்த்துதல் செய்யவந்து: தேவன் சாலொமோனின் நாமத்தை உம்முடைய நாமத்தைப்பார்க்கிலும் பிரபலபடுத்தி, அவருடைய சிங்காசனத்தை உம்முடைய சிங்காசனத்தைப் பார்க்கிலும் பெரிதாக்குவாராக என்றார்கள்; ராஜா தம்முடைய கட்டிலின்மேல் குனிந்து பணிந்துகொண்டார்.
48 பின்னும் ராஜா: என்னுடைய கண்கள் காண இன்றையதினம் என் சிங்காசனத்தின்மேல் ஒருவனை வீற்றிருக்கச் செய்த இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னார் என்றான்.
49 அப்பொழுது அதோனியாவின் விருந்தாளிகளெல்லாரும் அதிர்ந்து எழுந்திருந்து, அவரவர் தங்கள் வழியே போய்விட்டார்கள்.
50 அதோனியா, சாலொமோனுக்குப் பயந்ததினால் எழுந்துபோய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்.
51 இதோ, அதோனியா ராஜாவாகிய சாலொமோனுக்குப் பயப்படுகிறான் என்றும், இதோ, அவன் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு, ராஜாவாகிய சாலொமோன் தமது அடியானைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று இன்று எனக்கு ஆணையிடுவாராக என்கிறான் என்றும், சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது.
52 அப்பொழுது சாலொமோன்: அவன் யோக்கியன் என்று விளங்க நடந்து கொண்டால் அவன் தலைமயிரில் ஒன்றும் தரையிலே விழப்போகிறதில்லை; அவனிடத்தில் பொல்லாப்புக் காணப்படுமேயாகில், அவன் சாகவேண்டும் என்றான்.
53 அவனைப் பலிபீடத்திலிருந்து கொண்டுவர, ராஜாவாகிய சாலொமோன் ஆட்களை அனுப்பினான்; அவன் வந்து, ராஜாவாகிய சாலொமோனை வணங்கினான்; சாலொமோன் அவனைப் பார்த்து: உன் வீட்டிற்குப் போ என்றான்.

pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy