தமிழ்நாட்டில் அண்மைக் காலங்களில் கண்டறியப்பட்ட நடுகல் கல்வெட்டுகளும், பாறைக் கல்வெட்டுகளும் பல்லவர் காலத்தில் வட்டெழுத்து வரிவடிவம் மக்கள் சமூகத்தில் பெருவழக்காக இருந்ததைத் தெரிவிக்கின்றன. செங்கம், தர்மபுரிப் பகுதியில் பதிவான நடுகல்...
moreதமிழ்நாட்டில் அண்மைக் காலங்களில் கண்டறியப்பட்ட நடுகல் கல்வெட்டுகளும், பாறைக் கல்வெட்டுகளும் பல்லவர் காலத்தில் வட்டெழுத்து வரிவடிவம் மக்கள் சமூகத்தில் பெருவழக்காக இருந்ததைத் தெரிவிக்கின்றன. செங்கம், தர்மபுரிப் பகுதியில் பதிவான நடுகல் கல்வெட்டுகள், பூலாங்குறிச்சிக் கல்வெட்டு ஆகியவை இதற்கு முதன்மை சான்றாவணமாக உள்ளன. இக்கல்வெட்டுகள் தமிழகத்தின் உள் நிலப் பரப்பில் பதிவானவை. இச்சூழலில், சோழர் காலத்தில் தான் மலைப் பிரதேசங்களில் எழுத்து வழக்கம் பரவலாக்கம் பெற்றது என்று கருதும் போக்கு இருந்தது. சோழர் காலத்தில் பழங்குடி மக்கள் பொது சமூக நீரோட்டத்தில் இணையும் போக்கும் அதிகரித்திருந்தது. அக்காலத்தில் தமிழ் வரிவடிவத்தில் எழுதுவது பெரும் மக்கள் வழக்கமாகப் பரவியதற்கு அரசும் ஒத்துழைப்பு தந்தது. அரசு தமது உத்தரவை மக்களிடம் கொண்டுச் சேர்க்கக் கையாண்ட இச்செயலே சமூக மாற்றத்திற்கானக் காரணமாகக் கருதப்பட்டது. வட்டெழுத்து நடுகற்கள் மிகுதியாகப் பதிவாகியிருக்கும் உள் நிலங்களிலும்கூட சோழர் காலத்தில் தமிழ் வரிவடிவ எழுத்தே மிகுதியாகப் பயின்று வருகின்றது. ஆனால் அண்மைக் காலத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் புதூர்நாடு மேல்பட்டி, செந்தாரப்பட்டி, வத்தல்மலை, பெரிய வத்தலாபுரம், ஈரெட்டி, பர்கூர் போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட நடுகல் கல்வெட்டுகள் பல்லவர் காலத்திற்கு சற்று முன்பாகவே மலைப்பிரதேசங்களில் எழுத்தின் பயன்பாடு வழக்கில் வந்துவிட்டதைக் காட்டுவதாக அமைகின்றது. பொ.ஆ நான்காம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரையிலானக் காலவெளியில் வட்டெழுத்துப் பயன்பாடு எவ்விதம் மலைப்பிரதேசங்களில் பரவியிருந்தது என்றும், அதன் சமூக பொருளியல் தாக்கங்கள் குறித்தும் அண்மைக்கால கண்டறிதல்களின் வழியே விவரிக்க முயலுவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.