உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லியம் லாரன்ஸ் பிராக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்
லாரன்சு பிராக்
Lawrence Bragg
1915 இல் பிராக்
பிறப்புஉவில்லியம் லாரன்ச்ய் பிராக்
(1890-03-31)31 மார்ச்சு 1890
அடிலெயிட், தெற்கு ஆஸ்திரேலியா
இறப்பு1 சூலை 1971(1971-07-01) (அகவை 81)
வால்ட்ரிங்ஃபீல்டு, இப்சுவிச்சு, சஃபோல்க், இங்கிலாந்து
துறைஇயற்பியல்
பணியிடங்கள்
கல்விபுனித பீட்டர் கல்லூரி, அடிலெயிட்
கல்வி கற்ற இடங்கள்
Academic advisors
அறியப்படுவதுஎக்சு-கதிர் விளிம்பு விளைவு
எக்சு-கதிர் நிறமாலையியல்
எக்சு-கதிர் நுண்ணோக்கி
பிராக் சமன்பாடு
விருதுகள்
துணைவர்ஆலிசு ஒப்கின்சன் (1899–1989)
குறிப்புகள்
இவர் வில்லியம் ஹென்றி பிராக்கின் மகன். 1919 வரை கேம்பிரிட்சில் முனைவர் பட்டம் தரப்படுவதில்லை. ஜெ. ஜெ. தாம்சன் மற்றும் வில்லியம் ஹென்றி பிராக் ஆகிய இருவருமே வில்லியம் லாரன்ஸ் பிராகிற்கு இணை வழிகாட்டிகள் ஆவர்.

வில்லியம் லாரன்சு பிராக் (William Lawrence Bragg, 1 மார்ச்சு 1890 – 1 சூலை 1971) ஆத்திரேலியாவில் பிறந்த பிரித்தானிய இயற்பியலாளர். இயற்பியலில் எக்சு கதிர்கள் மூலமாகப் படிகங்களின் அமைப்பை ஆய்வு செய்ததுடன் எக்ஸ் கதிர் நிறமாலைமானி ஒன்றைக் கண்டு பிடித்ததற்காகவும் இவருடைய தந்தை வில்லியம் ஹென்றி பிராக்குடன் சேர்ந்து 1915 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். பிராக் விதியை உருவாக்கியவர்.

இவர் 1941 இல் இங்கிலாந்தின் வீரராகச் (knight) சிறப்பிக்கப்பெற்றார். தற்சமயம் இவர் நோபல் பரிசு பெற்றோரில் மிகவும் இளையவர் ஆவார். அப்பரிசைப் பெற்றபோது அவருக்கு வயது 25 தான் ஆகியிருந்தது. 1953ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேம்சு டி. வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் டி. என். ஏ அமைப்பைக் கண்டுபிடித்த மாபெரும் நிகழ்ச்சியின்போது பிராக் கேம்பிரிட்ஜில் உள்ள கேவெண்டிஷ் சோதனைக்கூடத்தின் இயக்குநராக இருந்தார். அச்சோதனைக் கூடத்தில்தான் வாட்சனும் கிரிக்கும் டி. என். ஏ அமைப்பைக் கண்டுபிடித்தனர்.

இளமை

[தொகு]

வில்லியம் லாரன்சு பிராக் தெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் 1890 ஆம் ஆண்டு மார்ச்சு 31 ஆம் நாள் பிறந்தார். இவர்களது குடும்பம் ஆங்கிலேய வம்சாவளி எனினும் லண்டனில் பிறந்து வளர்ந்த இவரது தந்தை வில்லியம் ஹென்றி பிராக் பணியின் காரணமாக ஆஸ்திரேலியாவில் வசித்த போது அங்கு பிறந்தார். இவருடைய தாயாரின் பெயர் குவெண்டோலின் பிராக். இவருக்கு ஒரு சகோதரரும் சகோதரியும் உண்டு. 1921-இல் 'ஆலிசு கிரேசு ஹாப்கின்சன்' என்ற மங்கையை மணந்து கொண்டார். இவ்விணையருக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் என நான்கு மக்கள் பிறந்தனர்.

'பில்லி' என அழைக்கப்பட்ட இவர் சிறு வயது முதலே மிகவும் சுறு சுறுப்பாக இருந்த இவர் கணிதம் அறிவியல் ஆகியவற்றில் ஆர்வம் செலுத்தினார். இவருக்கு ஐந்து வயதிருக்கும்போது இவருடைய மூன்று சக்கர வண்டியிலிருந்து கீழே விழுந்து கால்முறிவு ஏற்பட்டது. அப்போது வில்லெம் ரோண்ட்கன்‎ எக்சு கதிரைக் கண்டுபிடித்திருந்த நேரமாதலால், இவருடைய தந்தை வில்லியம் ஹென்றி பிராக் அக்கதிர் முறையைப் பயன்படுத்தி இவருடைய எலும்பு முறிவை அறிந்துகொண்டு சிகிச்சை செய்தார். இது ஆஸ்திரேலியாவில் எக்சு கதிரைப் பயன்படுத்திய முதல் நிகழ்ச்சியாகும்.

கடற்கரைக்குச் செல்லும் போதெல்லாம் கிளிஞ்சல்கள், கூடுகள் ஆகியவற்றைச் சேமிப்பது இவருடைய வழக்கம். அவ்வாறு சேமிக்கும்போது எதிர்பாராத வகையில் ஒரு புதிய மீனைக் கண்டறிந்தார். அந்த மீன் தற்போது இவருடைய் பெயரால் 'செப்லா பிராக்கில்'(Sepla Braggil) என்று அழைக்கப்படுகிறது.

அறிவியலில் மட்டுமல்லாது ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டுதல், தோட்ட வேலை, இலக்கியம் ஆகியவற்றிலும் இவர் ஆர்வம் செலுத்தினார்.

கல்வி

[தொகு]

படிப்பில் இவருடைய வயதின் தன்மையை மீறிய அறிவுத்திறன் இவருக்கு அமைந்திருந்தது. இவருக்கு பதினைந்து வயதான போது 'அடிலெய்டு பல்கலைக்கழகத்தில்' சேர்ந்தார். 1908-ல் கணிதத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டதாரி ஆனார். 1909-இல் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கைக்கழகத்தில் சேர்ந்தார். அதே நேரம் இவருடைய குடும்பமும், இங்கிலாந்தின் லீட்சு என்ற இடத்தில் குடியேறியது. திரித்துவக் கல்லூரியில் (Trinity College) ஒரு சிறந்த கணித வல்லுநராகச் சேர்ந்தார். மிக உயர்வான கல்வி ஊக்கத்தொகை இவருக்குக் கிடைத்தது. இவர் தேர்வு எழுதும் சமயம் நிமோனியாவில் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையில் இருக்க நேர்ந்தது. ஆனால், இவருடைய தந்தை இவரை இயற்பியலில் கவனம் செலுத்தும்படி ஆர்வமூட்டினார். அவரும் அவ்வாறே செயல்பட 1911-இல் இயற்பியல் பட்டம் பெற்றார்.[1][2]

பணி

[தொகு]

1912-இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தன் படிப்பை முடித்துப் பட்டம் பெற்ற பிறகு அங்குள்ள கேவெண்ட்ஷ் ஆய்வுக் கூடத்தில் தன் பணியைத் தொடங்கினார். அப்பொழுது எக்சு கதிர்கள் அலைவடிவம் கொண்டதா? அல்லது துகள்களா? என்ற விவாதம் தொடங்கியிருந்தது. இது பற்றி தந்தையும், மகனும் பல வகைகளில் விவாதித்தனர். எக்சு கதிர்கள் பற்றியும், மேக்சு வான் லாவின் எக்சு கதிர் வகைகள் பற்றியும், ஆய்வு செய்தபோது இவர்களுக்குப் பல வினாக்களுக்கு விடைகள் கிடைத்தன. இக்கதிர்கள் சில வகைகளில் அலை வடிவத்திலும் சில வகைகளில் துகள்களாகவும் செயல்படுகின்றன என்பதை உணர்ந்தனர். தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு பிராக் விதியை (Bragg's Law) உருவாக்கினர். 1912-ல் நவம்பரில் இந்த ஆய்வுகளை அறிக்கை வடிவத்தில் வெளியிட்டனர். எக்சு கதிர்களைக் கொண்டு படிகங்களில் ஆய்வு நடத்திய பிறகு இருவரும் சேர்ந்து 1915-ல் 'எக்சு கதிர்கள் மற்றும் படிக அமைப்பு (X rays and Crystal Structure) என்ற புத்தகத்தை வெளியிட்டனர்.

முதல் உலகப் போரின் போது இவர் பிரான்சில் இராணுவத்தில் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணி புரிந்தார்.[3] அந்தப் போரில் இவருடைய இளைய சகோதரர் 'பாப்' (Bob) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.[4] இவர் பணியில் இருந்தபோதுதான் இவருக்கு நோபெல் பரிசு பெற்ற செய்தி கிடைத்தது. 1919-இல் மான்செஸ்டரில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். 1937 வரை அப்பதவியில் இருந்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அனைத்துலக படிக வரைவுச் சங்கம் (International Union of Crystallography) ஒன்றை நிறுவி அதன் ஆரம்பகாலத் தலைவராகச் செயல் பட்டார். இவர் தந்தையைப் போலவே ராயல் நிறுவனத்தில் பல சிறுவர்களுக்கு அறிவியல் தொடர்பான பல சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார்.1937-38 -ல் தேசிய இயற்பியல் ஆய்வுக் கூடத்தின் இயக்குநராகப் பணி புரிந்தார். 1938 மற்றும் 1954-இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் இயற்பியலில் (Experimental Physics) கேவண்டிஷ் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1953-ல் டி. என். ஏ அமைப்பைக் கண்டறிவதில் முக்கியப் பங்கு வகித்தார். பிரான்சிஸ் கிரிக், ஜேம்சு வாட்சன் என்பவர்கள் இவரின் கீழ் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். கிரிக், வாட்சன், வில்கின்சு ஆகிய மூவரும் 1962-ல் நோபெல் பரிசு பெற பிராக் பரிந்துரை செய்தார். 1954,66 ஆண்டுகளில் ராயல் கழகத்தின் தலைவராகப் பணிபுரிந்தார்.

ஆய்வுகள்

[தொகு]

பிற்காலத்தில் லாரன்சு 'வடிவத் தொடர்புகளினால் தூண்டப்படும் முன்னேற்றங்கள் (Geometric relations could stimulate progress) என்ற வகையிலும் சிலிக்கேட்டுகள், சிலிக்கேட்டு வேதியல், உலோகவியல், புரத வேதியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். ராயல் நிறுவனத்தில் புரத மூலக்கூறுகளில் எக்சு கதிர்களைச் செலுத்தி அவற்றின் சிக்கல்களை ஆராய்வதற்கு என தனிப்பட்ட ஒரு குழுவை அமைத்துக் கொண்டு ஆய்வுகளில் ஈடுபட்டார்.[5][6] இவருடைய சிறப்பான சொற்பொழிவுகளாலும் இவரின் செயல்பாட்டுத் திறனாலும் இவருடைய ஆய்வுத் துறைகளில் பெரிதும் போற்றப்பட்டார்.

நோபல் பரிசு

[தொகு]

சோடியம் குளோரைடு என்ற வேதிச் சேர்மம், சோடியம் குளோரைடு என்ற மூலக்கூறுகளைப் பெறவில்லை. ஆனால், சோடியம் அயனிகளும், குளோரின் அயனிகளும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கான வடிவத்தில் அமைந்துள்ளன எனக் கண்டறிந்தார். இந்தக் கண்டுபிடிப்பு வேதியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. படிகங்களில் உள்ள அணுக்கள் அமைந்திருக்கும் விதத்தை இவர் ஆய்வு செய்தார். இவருடைய தந்தை எக்சு கதிர் நிறமாலை மானி ஒன்றை உருவாக்கினார். மேலும் எக்சு கதிரின் கதிரியக்கம் பற்றியும் விளக்கினார். இந்தக் கண்டு பிடிப்புகளுக்குத் தந்தை மகன் இருவருக்கும் நோபெல் பரிசு 1915-ல் வழங்கப்பட்டது. நோபெல் பரிசு பெற்ற போது இவருடைய வயது 25. மிக இளம் வயதில் நோபெல் பரிசு பெற்றவர் பிராக் ஆவார்.[7]

சிறப்புகள்

[தொகு]
  • 1915-இல் மத்யூக்கி பதக்கம் (தந்தையுடன இணைந்து )
  • 1946 -ல் ராயல் பதக்கம்
  • 1966 -இல் காப்ளே பதக்கம்
  • ஹூக்ஸ் பதக்கம்
  • 1941-இல் நாட்டின் சிறந்த வீரர்(Knight)என்ற பட்டம்
  • 1967-இல் மதிப்பியல் பட்டம் (Companion of Honour)(இங்கிலாந்து நாட்டு அரசியால் )

ஆகிய பட்டங்களும் பதக்கங்களும் இவரைப் பாராட்டி வழங்கப்பட்டன.

எழுதிய நூல்கள்

[தொகு]
  • எக்ஸ் கதிர்களின் படிக அமைப்பு (X Rays and Crystal Structure(1915,non-fiction, with William Bragg)
  • சிலிகேட்டுகளின் கட்டமைப்பு (The Structure of Silicates) (1930, non-fiction)
  • The Crystalline State (1934, non-fiction)
  • Electricity (1936, non-fiction)
  • தாதுக்களின் மூலக்கூறு அணு அமைப்பு (Atomic Structure of Minerals (1937, non-fiction)

மறைவு

[தொகு]

பிராக்கின் 81 ஆம் வயதில் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனளிக்காமல் 1971 ஜூலை 1 ஆம் நாள் இவருடைய உயிர் பிரிந்தது. இவருடைய சிறப்பைப் போற்றும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. ஆஸ்திரேலியாப் பல்கலைக் கழகத்தில் இவருடைய பெயரில் தங்கப்பதக்கம் ஒன்று இயற்பியல் பிரிவில் சிறப்பாகப் பணி புரிபவருக்கு 1992-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]

'அறிவியல் ஒளி', மார்ச்சு 2012 இதழ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cambridge physicists www.cambridgephysics.org
  2. See Fred Hoyle's remarks regarding Hutchinson in 1965 Galaxies, Nuclei and Quasars p38 London:Heinemann and also R J N Phillips 1987 "Some Words from a Former Student" in Tribute to Paul Dirac, p31 Bristol:Adam Hilger
  3. London Gazette issue=30576 startpage=3289 date=15 March 1918 accessdate=2 September 2010}} OBE
  4. cwgc id=680754 ,name=Bragg, Robert Charles accessdate=3, September 2010
  5. 1950 "Polypeptide chain configurations in crystalline proteins" Proc Roy A 203, p321
  6. L N Johnson (1966) “The structure and function of lyszoyme” Sci Prog 54, p367
  7. William Van der Kloot, Lawrence Bragg's role in the development of sound-ranging in World War I, Notes and Records of the Royal Society, 22 September 2005, vol. 59, no. 3, pp. 273–284.

வெளி இணைப்புகள்

[தொகு]
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy